முதியோரின் கடைசி  நிமிடங்கள்

எனது பெயர் யோசுவா. நான் ஒரு ஜவுளி கடை நடத்தி வருகிறேன். கொரோனா காலத்திற்கு பிறகு எனது கடை நஷ்டத்தில் ஓடி கொண்டிருந்தது. என் கடைக்கு வாடிக்கையாளர்கள் வரவு குறைவாகவே  இருக்கும்.  நான் அடிக்கடி மாலை நேரத்தில் கடைக்கு செல்வது வழக்கம். அன்று வழக்கம் போல் எனது வண்டியில் சென்று கொண்டிருந்தேன். நான் சாலையில் சென்று கொண்டிருக்கும் போதே நான் கண்ட காட்சி என மனதை உடைத்தது. ஒரு வயதான அம்மா  நடக்கமுடியாமல், இரு கைகளையும் வைத்து தவழ்ந்தவாரு சாலையின் மேல் சென்று கொண்டிருந்தார். அந்த வயதான பெண்மணிக்கு சுமார் 90 வயது இருக்கும். அந்த வயதான பெண்மணியை பார்த்த பிறகு என்னால் வண்டி ஓட்ட முடியவில்லை. இதயம் கனத்தது. வண்டியை நிறுத்தினேன். பின்னோக்கி திரும்பி  பார்த்த பொழுது, அந்த வயதான பெண்மணி ஒவ்வொருவரிடமும் சாப்பாட்டுக்காக கையேந்தி கொண்டிருந்தார். என் மனம் உடைந்தது. எதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தேன். உடனே விரைந்து சென்று அருகில் இருந்த ஹோட்டலில் சாப்பாடு வாங்கினேன். அந்த அம்மாவை தேடினேன். அந்த வயதான அம்மா சாலையில் ஒரு மூலையில் இருந்தார்.ஓடி சென்று சாப்பாடை கொடுத்தேன். அந்த வயதான பெண்மணியின் கண்களில் கண்ணீர் வழிந்தது. ஏன் அம்மா அழுகிறீர்கள் என்று கேட்டேன். அதற்கு அந்த வயதான பெண்மணி, நான் சாப்பிட்டு இரண்டு நாட்கள் ஆகிறது.அதான் இன்றைக்கு சாப்பாடை பார்க்கும் பொழுது எனக்கு கண்ணீர் வந்தது என்றார். அந்த வார்த்தை என்னை உடைத்தது. அந்த வயதான பெண்மணி சாப்பிட்டு முடித்ததும் என்னை பார்த்து ஒரு சிரிப்பு சிரித்தாள்.  நான் அந்த இடத்தை விட்டு கிளம்பி வீட்டுக்கு வந்தேன். என் மனதில் அந்த வயதான தாயின் கண்ணீர் என் கண் முன் வந்து வந்து சென்று கொண்டிருந்தது. ஏன் இவர்களுக்கு  இந்த நிலைமை என்று யோசித்தேன்.. இதயம் கனத்தது. நாளைக்கு அந்த வயதான பெண்மணி எப்படி சாப்பிடுவார் என்று யோசித்தேன். இரவு முழுவதும் தூக்கம் வரவில்லை. அடுத்த நாள் காலையில் எழுந்து உடனே  ஒரு டிபன் பாக்ஸில் மூன்று இட்லியும், சிறிது வாழைப்பழத்தையும் எடுத்து கொண்டு வேகமாக  வண்டியில் விரைந்தேன். அந்த வயதான பெண்மணி அதே இடத்தில் உட்காந்து இருந்தார். அவரிடம் காலை உணவை கொடுத்தேன். சந்தோசத்தோடு வாங்கி , என்னை ஆசிர்வதித்தார். அவர் முகத்தில் சிரிப்பை பார்த்தேன். ஏன் சிரிக்கிறீர்கள்? என்று கேட்டேன். எனக்குன்னு யாருமே இல்லனு எத்தனையோ நாட்கள் அழுது இருக்கிறேன். இன்றைக்கு ஒரு மகனை பார்க்குறேன் என்றார். அந்த வயதான தாயார் சிரித்த சிரிப்பு எனக்குள் ஒரு மகிழ்ச்சியை கொடுத்ததை உணர்ந்தேன். பின்பு என் கடைக்கு வந்தேன். அன்று வழக்கத்துக்கு மாறாக என்  கடைக்கு அதிகமான ஆட்கள் வந்தார்கள். கடைக்கு நல்ல வருமானம் வந்தது. நீண்ட நாட்களுக்கு பிறகு எனக்கு அதிக வருமானம் கிடைத்தது. நெடுநாளைக்கு பிறகு, என் முகத்தில் சிரிப்பை பார்த்தேன். இந்த சிரிப்புக்கு காரணம், அந்த வயதான பெண்மணியின் சிரிப்புதான் என்று என் மனம் கூறியது. அன்றைக்கு சீக்கிரத்தில் கடையை பூட்டிவிட்டு, இரவு உணவு வாங்கி கொண்டு , அந்த வயதான தாயாரை பார்க்க விரைந்தேன். என்னை பார்த்ததும், வாப்பா உனக்காகத்தான் காத்து கொண்டிருக்கிறேன் என்றார். அந்த அம்மாவின் சிரிப்பு எனக்குள் ஒரு புது விதமான சந்தோசத்தை கொடுப்பதை உணர்ந்தேன். வயதான அம்மாவின் அருகில் உட்காந்தேன். அந்த வயதான தாயை பற்றி அறிய விரும்பினேன். அந்த வயதான பெண்மணிக்கு நான்கு பசங்க இருப்பதாக கூறினார். ஒருவர் கூட உங்களை கவனிக்க வில்லையா? என்று கேட்டேன். இல்லை மகனே, எனது கணவர் பல வருடங்களுக்கு முன்பு இறந்து போனார். எனது பிள்ளைகளை நல்ல முறையில் வளர்த்து திருமணம் செய்து கொடுத்தேன். என் சரீரத்தில் பெலன் இருக்கும் வரை நான் உழைத்து கொடுத்தேன். காலங்கள் உருண்டோடின .என்னால் வயது முதிர்வின் காரணமாக வேலை செய்ய முடியவில்லை. என் மகன்கள், மருமகள்கள் என்னை பாரமாக கருதினார்கள். ஒரு நாள் என் மருமகள், என்னை தள்ளி விட்டதில் மாடிப்படியில் இருந்து விழுந்தேன். விழுந்ததில் என் முதுகெலும்பு பாதிக்கப்பட்டது. என்னால் நடக்கமுடியவில்லை. என்னை இரவோடு இரவாக சாலையில் விட்டு சென்றனர். என்று கூறினார் அந்த வயதான பெண்மணி. அந்த வயதான தாயின் கதையை கேட்டதும், என்னை அறியாமலே அழுதேன். அவர்களிடம், முதியோர் இல்லத்தில் உங்களை சேர்த்து விடவா என்று கேட்டேன். நான் தினமும் உங்களை வந்து பார்க்கிறேன்  என்று கூறினேன். அதற்கு அந்த வயதான பெண்மணி, மகனே, நான் இன்னும் சிறிது காலம் தான் உயிரோடு இருப்பேன். நீ என்னை குறித்து கவலைபடாதே. நான் யாருக்கும் பாரமாக இருக்க மாட்டேன். என்று கூறினார். இந்த வார்த்தைகள் என் மனதை காயப்படுத்தியது. வயதான தாயாருடன் பேசி விட்டு கனத்த இதயத்துடன் வீடு திரும்பினேன். வீட்டில் அன்றும் எனக்கு தூக்கமே வரவில்லை. ஏன் மனிதர்கள் இவ்வாறு இருக்கிறார்கள்? என்று சிந்தித்தேன். காலையில் வேகமாக எழுந்து விட்டு, அந்த வயதான பெண்மணிக்கு காலை உணவை கொடுத்து விட்டு சென்றேன். உணவு கொடுக்கும் பொழுது அவர்கள் முகத்தில் சிரிப்பை பார்த்தேன். கடைக்கு சென்றேன். அன்றைக்கும் என் கடையில் கூட்டம் நிரம்பி வழிந்தது. நல்ல வருமானம் கிடைத்தது. அந்த வயதான தாயாரின் சிரிப்புதான் என் வருமானத்திற்கு காரணம் என்று யோசித்தேன். அந்த தாயாரை சந்தித்த பிறகுதான் என் கடையில் நல்ல வருமானம் கிடைத்ததை உணர்ந்தேன். இரவில்  சீக்கிரம்  கடையை பூட்டி விட்டு, இரவு சாப்பாடு வாங்கி விட்டு அந்த வயதான தாயாரை பார்க்க சென்றேன். ஆனால் என்னை பார்த்ததும் எப்பொழுதும் சந்தோசமாக இருக்கும் அந்த வயதான தாயார், வழக்கத்துக்கு மாறாக சோகமாக காணப்பட்டார். ஏன் அம்மா சோகமா இருக்கிறீர்கள்? என்று கேட்டேன். உடல் நிலை சரி இல்ல பா.. என் ஓட்டம் முடிய போகுதுனு கூறினார். நான் உடனே, வாங்க அம்மா, நான் உங்களை  ஆஸ்பத்திரிக்கு  அழைத்து கொண்டு போறேன் என்று கூறினேன். அவர் வர மறுத்து விட்டார். நான் கொண்டு வந்த உணவை கூட அவரால சாப்பிட முடியல. என் மனதுக்கு கஷ்டமாக இருந்தது. அந்த வயதான தாயார், நீ கிளம்பு பா. நீ இனிமே நல்லா இருப்ப. உன் நல்ல மனசுக்கு நீ ரெம்ப நல்லா இருப்பனு வாழ்த்தி என்னை அனுப்பி விட்டார். நான் அவரை என்னோடு வரும்படி அழைத்தேன். ஆனால் அந்த வயதான தாயார் வரவில்லை. மிகவும் சோகத்துடன் வீடு திரும்பினேன்.அடுத்த நாள் எப்பொழுது விடியும் என்று எதிர்பார்த்துக்கொண்டிருந்தேன். இரவு முழுவதும் எனக்கு தூக்கமே வரவில்லை. அடுத்தநாள் வந்தது. குளித்துவிட்டு முதல் வேலையாக அந்த வயதான தாயாரை பார்க்க , காலை உணவுடன் சென்றேன். ஆனால் அந்த இடத்தில், அந்த வயதான தாயார் இல்லை. என் உள்ளம் உடைந்தது. பக்கத்தில் இருந்தவர்களிடம் விசாரித்தேன். அந்த வயதான தாயார் இரவே இறந்து விட்டார் என்றும், அனாதை பிணம் என்று அவரது சரீரத்தை காவல்துறையினர் காலையில் எடுத்து சென்று விட்டனர் என்றும் கூறினர். அவர்கள் கூறியதை கேட்டதும் நான் மனமுடைந்து அழுதேன். எதையோ இழந்தது போன்ற வலி. கடைசியாக கூட அந்த வயதான தாயாரை பார்க்க முடியவில்லையே என்று என்னையும் அறியாமல் அழுதேன். தான் இறக்க போவதை தெரிந்து தான் அந்த தாயார் என்னை இறப்பதற்கு முன்பு ஆசிர்வதித்து இருக்கிறார். ஒரு வேலை அவர்கள் என் கண் முன் இறந்து இருந்தால் என்னால் தாங்கவே  முடியாது என்று தான் இரவோடு இரவாக என்னை விட்டு பிரிந்து போய்விட்டார் போல என்று சிந்தித்தேன். ஏனென்றால், அந்த வயதான தாயார் பிரிவை என்னால் ஏற்று கொள்ளவே முடியவில்லை. அந்த சிரிப்பை அன்று முழுவதும் மறக்க முடியாமல் தவித்தேன். அன்றைக்கும் என் கடையில் கூட்டம் நிரம்பி வழிந்தது. என் வியாபாரம் பெருகியது. அந்த வயதான தாயார் ஆசிர்வதித்து போல நான் பல கடைகளை வாங்கினேன். ஆனால் அந்த இடத்தை விட்டு ஒவ்வொரு நாளும் செல்லும் போது அந்த வயதான தாயாரை அதிகமாக நினைப்பேன். இருந்தாலும் கடைக்கு செல்லும் போது எல்லாம் அந்த வயதான தாயார் என்னை பார்த்து சிரித்ததை நினைப்பேன். வருடம் தோறும் அந்த வயதான தாயாரின் நினைவு நாளில் ஒவ்வொரு முதியோர் இல்லத்தில் உள்ளவர்களுக்கு புதிய ஆடையும், நல்ல  உணவையும் வழங்கி வருகிறேன்.

பரிசுத்த வேதாகமத்தில் ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்.

ஏழைக்கு இரங்குகிறவன் கர்த்தருக்கு கடன் கொடுக்கிறான், அவன் கொடுத்ததை அவர் திரும்ப கொடுப்பார் என்றும் மேலும்

நற்கிரியைகளை  செய்வதில் சோர்ந்து போகாமல் இருப்போமாக என்று வேத வாக்கியம் கூறுகிறது.

முடிந்தவரை நம்மளால் இயன்ற உதவியை மற்றவர்களுக்கு செய்வோமாக. அது மட்டுமில்லாமல் ஒவ்வொரு பிள்ளைகளும், நம்மளை நன்றாக படிக்கச் வைத்த பெற்றோரை கடைசி வரை நன்றாக பார்த்து கொள்ள வேண்டும். அந்த ஆசிர்வாதம் தலை முறை தலைமுறையாய் வரும்.

சுபம்