பீர்பாலின் நீதியான தீர்ப்பு 

அக்பரிடம் பணியாற்றி கொண்டுவரும் பீர்பாலை பற்றிய புகழ் நாடெங்கும் பரவி, மணிப்பூர் நாட்டு மன்னன் மங்கள பாண்டியன்   செவிகளிலும் விழுந்தது. பீர்பாலின் அறிவுத்திறனை பார்க்க வேண்டும் என்ற ஆவல் அவனுக்குள் எழுந்தது. ஒரு நாள் மாறுவேடமணிந்து குதிரை ஒன்றின் மேல் ஏறி பீர்பாலை காண ஆக்ராவுக்கு சென்றான் மங்கள பாண்டியன்.

               வழியில் வழிப்போக்கன் ஒருவன்  பதைபதைக்கும் வெயிலில் நடந்து சென்று கொண்டிருந்தான். அவனை பார்க்க மங்கள பாண்டியனுக்கு மிகவும் பரிதாபமாக  இருந்தது.

                       ஐயா இந்த கடும் வெயிலில் எங்கே நடந்து சென்று கொண்டிருக்கிறீர்கள்? என்று வழிப்போக்கனைப் பார்த்துக்  கேட்டார்

மங்களபாண்டியன்.

ஐயா இருட்டுவதற்குள் ஆக்ரா சென்று விட வேண்டும், அதற்காகத்தான் கொளுத்தும் வெயிலையும் பொறுப்படுத்தாமல் சென்று கொண்டிருக்கிறேன் என்றான்.

நெடுந்தொலைவு நடந்து வந்து களைத்துப் போயிருக்கிறீர்கள். இந்தக் குதிரையில் ஏறி கொள்ளுங்கள். நான் நடந்து வருகிறேன் என்று குதிரையில் இருந்து கீழே இறங்கி அந்த வழிப்போக்கனை அதில் ஏறி கொள்ளுமாறு கூறினான் மங்களபாண்டியன்.

வழிப்போக்கனும் குதிரைமேல் ஏறி அமர்ந்து கொள்ள மங்களபாண்டியன் குதிரைக்கு பக்கத்தில் நடந்து வந்தான்.

ஆக்ரா எல்லையை கடந்து நகரத்துக்குள் நுழைந்ததும், வழிப்போக்கன்," குதிரையை விட்டு இறங்காமலேயே "ஐயா தாங்கள் எனக்கு வழிகாட்டிக் கூடி வந்ததற்காக மிகவும் நன்றி செலுத்துகிறேன். இனி நீங்கள் செல்லலாம்" என்றான்.

"அதுசரி, நீ குதிரையை விட்டு இறங்கினால்தான் நான் செல்ல முடியும் என்று கூறினான் மங்கள பாண்டியன்.

"இது என் குதிரை. நான் என் குதிரையை விட்டு எப்படி தனித்து செல்ல முடியும்?" என்று கூறினான் மங்கள பாண்டியன்.

 அதற்கு வழிப்போக்கன்  : என்ன சொன்னாய்? உன் குதிரையா இது ?. நீ பெரிய வழிப்பறிக்காரனாக இருப்பாய் போல்  இருக்கிறதே!. நீ என்னுடன் தொடர்ந்து வரும் போதே நான் சந்தேகப்பட்டேன். அது சரியாகப் போய்விட்டது என்று குதிரையை விட்டு இறங்காமலே கத்தினான். அதற்குள் கூட்டம் கூடிவிட்டது.

கூட்டத்தாரிடம் தான் யார் என்று கூறாமலே, வழிப்போக்கன் தன் குதிரையை களவாடி கொண்டதாக கூறினான். வழிப்போக்கனும் குதிரை என்னுடையது என்று சாதித்தான்.

 

இருவருடைய பேச்சுக்களை கேட்ட, கூட்டத்தில் இருந்த சிலர், இந்த மாதிரி சிக்கலான வழக்குகளை எல்லாம் பீர்பால் ஒருவரே  தீர்த்து வைப்பார் என்றும், நீங்கள் இருவரும் பீர்பாலிடம் செல்லுங்கள் என்றும் கூறினார்கள்.

இதை கேட்ட மங்களபாண்டியன் மிகவும்

மகிழ்ச்சி அடைந்தான். பீர்பாலைப் பார்த்து அவருடைய அறிவுத்திறனை நேரில் காண வேண்டும் என்று வந்த மங்கள பாண்டியனுக்கு பீர்பாலை காண வேண்டிய சந்தர்ப்பம் தானாகவே ஏற்பட்டது குறித்து உள்ளூர மகிழ்ந்தான். இருவரும் பீர்பாலிடம் சென்றனர்.

அப்பொழுது பீர்பால் சில வழக்குகளை விசாரித்து கொண்டிருந்தார்.

மங்கள பாண்டியனையும் , வழிப்போக்கனையும் பார்த்து, உங்கள் வழக்கு என்னவோ ? என்று விசாரித்தான்.

இருவரும் குதிரை தங்களுக்கே  உரியது என்று வாதாடினர். 

"சரி, உங்கள் குதிரையை இங்கே விட்டு செல்லுங்கள். மீண்டும் நாளையத்தினம் வாருங்கள். குதிரை எவருடையது என்று தீர்ப்பளிக்கிறேன் " என்று கூறினான் பீர்பால்.

வழிப்போக்கனும், மங்கள பாண்டியனும் குதிரையை அங்கேயே விட்டு சென்றனர்.

 

 அவர்கள் சென்றதும், வேலையாள் ஒருவனை அழைத்து, அவர்கள் அறியாமல் குதிரையை அவர்களுக்கு பின்னால் கொண்டு போய், குதிரை எவரைப்  பின் தொடர்கிறது என்று பார்த்து வர சொன்னான். 

சற்று நேரம் கழித்து குதிரையுடன் திரும்பி வந்த வேலையாள், மங்களபாண்டியனும், வழிப்போக்கனும்  வெவ்வேறு பாதையில் திரும்பியதும், குதிரை மங்களபாண்டியன் சென்ற பாதையிலே செல்லத் தொடங்கியது என்று பீர்பாலிடம் கூறினான்.

அடுத்த நாள் பீர்பாலின் இல்லத்தில் வழக்குரைத்தவர்களும், பிறரும் பீர்பாலின் தீர்ப்பை கேட்க வேண்டி ஆவலுடன் வந்தனர்.

மங்களபாண்டியனையும் வழிப்போக்கனையும்  பார்த்து "உங்கள் குதிரை லாயத்தில் கட்டப்பட்டு இருக்கிறது . குதிரைக்கு உரியவர் அதனை அவிழ்த்துச் செல்லலாம்" என்றார்.

இருவரும் லாயத்திற்குள் சென்றனர். அங்கு ஒரே  மாதிரி பத்துக்கும் மேற்பட்ட குதிரைகள் இருந்தன. எல்லாம் ஒரே அளவு, ஒரே நிறம் கொஞ்சம் கூட வித்தியாசம் இல்லை. வழிப்போக்கனுக்கு முன்தினம் தான் விட்டு சென்ற குதிரை எதுவென்று தெரியவில்லை. அவன் மூளை குழம்பி விட்டது. இதற்குள் மங்களபாண்டியன் குதிரைகளின் இடையில் சென்று தன் குதிரைகளை அவிழ்த்து கொண்டு வந்து விட்டான்.

வழிப்போக்கனுக்கு முகம் தொங்கி போய் விட்டது.  அவனை இரு காவலாளிகள் அழைத்து சென்றனர்.

நல்லவேளை! இந்த வழக்கில் நான் யார் என்று தெரிந்து இருந்தால் எவ்வளவு அவமானமாக இருக்கும்!. என் நாட்டு மக்கள் என்னைப்பற்றி என்ன நினைப்பார்கள்?" குதிரையைக் கோட்டை விட்டவன் நாளைக்கு இவ்வாறுதான் நாட்டையும் கோட்டை விடுவான் " என்று இழிவாக பேசமாட்டார்களா?. இப்பொழுது பீர்பாலின் அறிவுத்திறனால் நாம் யார் என்பது வெளிப்படாமலேயே குதிரை நமக்கு கிடைத்து விட்டது என்ற மகிழ்ச்சியுடன் மங்களபாண்டியன் பீர்பாலை வணங்கி விட்டு செல்லத் தொடங்கினான்.

 

அப்பொழுது பீர்பால் தனது ஆசனத்திலிருந்து  எழுந்து, " நில்லுங்கள் மங்களபாண்டியரே!. நீங்கள் இப்பொழுது என் விருந்தாளி. விருந்தினர் மாளிகையில் உங்களுக்கு எல்லாவித வசதிகளும்  செய்யப்பட்டு உள்ளன. தாங்கள் வெளியே தங்கி துன்பப்பட வேண்டாம் என்றார்.

இதை கேட்ட மங்களபாண்டியனுக்கு, தலை சுற்றுவது போல் இருந்தது.

 நான் மாறுவேடத்தில் வந்த செய்தி எவருக்கும் தெரியாது. அப்படிருக்க தாங்கள் எவ்வாறு என்னை கண்டுகொண்டீர்கள்? என்று பீர்பாலைப் பார்த்து வியப்புடன் கேட்டான்.

அதற்கு பீர்பால், வெளிநாடுகளில் இருந்து வருபவர் எவர், எங்கிருந்து வருகிறார், எதற்காக வருகிறார் என்ற சங்கிதிகளை உடனுக்குடன் எங்கள் ஒற்றர்கள் விசாரித்து எங்களுக்கு தகவல் அனுப்புவார்கள். அதன்மூலம்தான்  தாங்கள் வந்திருப்பதை அறிய முடிந்தது என்றார்.

பீர்பாலுடன் விருந்தினர் மாளிகைக்கு சென்றார் மங்களபாண்டியன்.

உணவு உண்ணும் போது பீர்பாலுடன் பல சங்கிதிகளைப் பற்றி பேசி கொண்டிருந்த மங்களபாண்டியன் ," பீர்பால் , நீர் வழக்குரைத்த வழக்குகளை எல்லாம் நேரில் கண்டேன். இந்த சிக்கலான வழக்குகளில் எப்படி நீர் உண்மை குற்றவாளியை கண்டுபிடித்தீர்?

"மங்களபாண்டியரே, உமது வழக்கில் நீங்கள் இருவரும் போனதும்  உங்கள் இருவரது பின்னால்  குதிரையைக் கொண்டு செல்லுமாறு வேலையாளிடம் கூறினேன். சற்று நேரம் கழித்து வந்த வேலையாள் குதிரை உங்களையே பின்தொடர்ந்தது என்று கூறினான்.

ஆனால் இதை வைத்து கொண்டு மட்டும் தீர்ப்பளித்து விட  முடியாது என்ற கருத்துடன்தான் உம் குதிரையை அதேபோன்ற பத்து குதிரைகளின் நடுவில்   விட்டு    வைத்துக் குதிரைக்குரியவர் அழைத்து செல்லலாம் என்றேன். என்னுடைய யுக்தி நல்ல விதத்தில் பலன் தந்தது என்றார்.

பரிசுத்த வேதாகமத்தில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

பிறனுக்கு விரோதமாகப் பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக.

 

 பிறனுடைய வீட்டை இச்சியாதிருப்பாயாக; பிறனுடைய மனைவியையும், அவனுடைய வேலைக்காரனையும், அவனுடைய வேலைக்காரியையும், அவனுடைய எருதையும், அவனுடைய கழுதையையும், பின்னும் பிறனுக்குள்ள யாதொன்றையும் இச்சியாதிருப்பாயாக என்றார்.

என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பின்பு மங்களபாண்டியன் விடை பெற்று சென்றான்